சுயமரியாதைத் தத்துவங்களே முன்னேற்றத்திற்கு அடிப்படை - 18-Jul-2016 06:07:04 PM

1957இல் தஞ்சாவூரில் தந்தை பெரியாரின் சொற்பொழிவைக் கேட்டு சுயமரியாதைக் கொள்கையின் பால் ஈர்க்கப்பட்டார். அன்று முதல் இன்று வரை தந்தை பெரியாரின் கொள்கைகளைப் பரப்பும் பணியில் ஈடுபாட்டுடன் இயங்கிக் கொண்டே இருக்கிறார். ”விடுதலை” நாளேட்டில் ”மின்சாரம், மயிலாடன்” என்னும் மறைபொருள்களில் தொடர்ந்து ஏராளமாக எழுதிக் கொண்டே இருக்கும் இவர், எல்லாராலும் ”கவிஞர்” என்றே அறியப்பெற்ற ஓர் இனிப்பு மின்சாரம்.

கவிஞர் கலி.பூங்குன்றன் ஓர் எழுத்துப் படைப்பாளி; இருபதுக்கும் மேலான நூல்களை படைத்துள்ளார்; பெரியாரியல் வாழ்க்கை நெறியில் சமுதாய மேன்மைக்கான கருத்துரைகளை வழங்கி வரும் சொற்பொழிவுகளால் ”பெரியார் பேருரையாளர்” என்னும் அடைமொழி கொண்டவர்; தந்தை பெரியார் உருவாக்கிய திராவிடர் கழகத்தின் துணைத் தலைவராக, சீரிய செயல்பாட்டாளராகத் திகழ்கிறார்.

தஞ்சாவூர் காவிரிக் கரையை ஒட்டிய மயிலாடுதுறை இவரது பிறப்பிடம். கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர், பெரியார் பேருரையாளர் எனப் பன்முக ஆற்றல் கொண்ட இந்த எளிமையான உருவத்திடம் கண்ட வேர்முகம் இங்கே....


உங்களுக்குள் ஒரு கருஞ்சட்டைக்காரராக உருவெடுத்த, தொடக்க காலத்தைப் பற்றிச் சொல்லுங்கள்.
பதினொன்றாம் வகுப்பு (SSLC) படிக்கும் வரை நான் ஒரு பக்திமான்தான். எங்கள் பகுதி, திராவிடர் கழகக் கோட்டையே என்றாலும் நான் தப்பித்து வந்து கொண்டிருந்தேன்.

1957 நவம்பர், 3ஆம் தேதி  தஞ்சாவூரில் ஜாதி ஒழிப்பு சிறப்பு மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில்தான் தந்தை பெரியார் அவர்களுக்கு எடைக்கு எடை வெள்ளி ரூபாய்கள் துலாக்(கோல்) அளிக்கப்பட்டது (ரூபாய் 7,704).

அந்த நிகழ்ச்சிக்கு என்னையும் அழைத்துச் சென்றனர். கடும் மழையிலும் மாநாடும் பேரணியும் நடைபெற்றன. இலட்சோப லட்சம் மக்கள் ஆண்களும் பெண்களுமாய்க் கூடியிருந்தனர்.

அந்த மாநாட்டின் எழுச்சி, மக்களின் உணர்ச்சி தந்தை பெரியார் அவர்களின் உரை என்னுள் ஒரு புது கிளர்ச்சியை ஏற்படுத்தியது.

“சுதந்திர நாட்டில் ஜாதி இருக்கலாமா? ஜாதி இருக்கும் நாட்டில் உண்மையான சுதந்திரம் இருக்குமா?’’ என்று கேட்ட தந்தை பெரியார் அவர்களின் கேள்வி ஈடு இணையற்றது.

மாநாடு முடிந்து சொந்த ஊரான மயிலாடுதுறைக்குத் திரும்பியபோது, அண்ணன் கோ.அரங்கசாமி (இப்பொழுது 90 அகவையைத் தொட்டுக் கொண்டுள்ளார்) “ஞான சூரியன்’’என்னும் நூலைக் கொடுத்து என்னைப் படிக்கச் சொன்னார். அவ்வளவுதான் புதுமனிதன் ஆனேன்!

பழைமை அசிங்கத்திலிருந்து தப்பித்தேன்! எங்கள் வீட்டில் எங்கள் அண்ணன் மா.க.கிருட்டினமூர்த்தி அவர்கள் அய்யாவின் கொள்கை வழியில் உறுதியாக இருந்து, எங்களுக்கு வழிகாட்டியாக இருந்தது பதிவு செய்யப்பட வேண்டிய ஒன்றாகும்.

தமிழரா, திராவிடரா? என்னும் சொல்லாட்சிச் சொற்போர் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
 தமிழன் என்றால் வெறும் தமிழ் உணர்வு மட்டுமே இருக்கும், திராவிடன் என்றால் தமிழுணர்வோடு இனவுணர்வும் இருக்கும். இதுபற்றி தந்தை பெரியார் கூறும் கருத்து கருத்தூன்றத்தக்கது; - கவனிக்கத்தக்கது!

“ஆரியர்கள் முதலில் தம் கலாச்சாரத்தைப் புகுத்தித்தான் நம்மை வெற்றி கொண்டார்கள். நம் கலாச்சாரத்தைத் தடுத்துத்தான் நம் மீது ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தார்கள். நாமும் நமது கலாச்சாரத்தை மறந்து ஆரிய கலாச்சாரத்தை ஏற்றுக் கொண்டதால்தான், அவர்களுக்குக் கீழான மக்களாக, சூத்திரர்களாக, பஞ்சமர்களாக ஆக்கப்பட்டோம்.

எனவே, அந்தக் கலாச்சாரத்திலிருந்து விடுபட வேண்டுமென்றால் வெறும் போராட்டம் ஒன்றினால் மட்டும் வெற்றி பெற்றுவிட முடியாது. கலாச்சாரத்தின் பேரால் - இனத்தின் பேரால் போராட்டம் நடைபெற வேண்டும். அதில் வெற்றி பெற வேண்டும். அப்போதுதான் நாம் விடுதலை பெற்றவராவோம். மொழிப் போராட்டம், கலாச்சாரப் போராட்டத்தின் ஒரு பகுதிதானேயொழிய முழுப்போராட்டமாக ஆகிவிடாது. சட்டம், சாஸ்திரம், சமுதாயம், சம்பிரதாயப் பழக்க வழக்கங்கள் புராணங்கள், இதிகாசங்கள் ‘இவை எல்லா’வற்றிலிருந்துமே நம் இழிவை நீக்கமடைந்தாக வேண்டும். மொழியால் வெற்றியும் மேம்பாடும் பெற்று வருவதாலேயே நமது இழிவும் இழிவுக்கு ஆதாரமான கலாச்சாரமும் ஒழிந்து விட மாட்டாது’’ (‘விடுதலை’, 27_1_1950).

“சுயமரியாதைத் தத்துவங்களே முன்னேற்றத்தின் அடிப்படை. வர்ணப்பிரிவினையை எதிர்ப்போர் யாவராயினும் திராவிடரே! அந்நிய ஆதிக்கத்தை வெறுக்கும் எந்த சிறு பகுதியும் திராவிடநாடே’’ (‘விடுதலை’ 17_11_1947) என்று தந்தை பெரியார் கூறுவது எல்லை, இனத்தைக் கடந்து ஒரு பேதமற்ற சமத்துவ தத்துவத்தின் குறியீடாகும்.

தந்தை பெரியார் கூறியுள்ள கருத்துதான் முக்கியமானது.

தமிழ்த் தேசியம் என்பதை முன்னெடுத்தவர்கள் வெளியிட்டுள்ள ஓர் ஆவணத்தில் “பார்ப்பான் என்றால் சிறந்தவன், இளைஞன் என்றும் ஆரியன் என்றால் சீரியன், உயர்ந்தவன்’’ என்றும்பொருள் கொடுப்பதிலிருந்தே தந்தை பெரியார் கூறும் திராவிடர் என்பதன் ஆழமும் அவசியமும் அருமையாக விளங்கிடவில்லையா.

ஒருங்கிணைந்த இந்தியாவில் “திராவிடம்’’ என்பதைவிட, “தமிழ்நாடு தமிழருக்கே’’ என்னும் முழக்கத்தை முன் வைத்துத்தானே  1938இல் மாநாடு கூட்டி தந்தை பெரியார் அறிவித்தார்?
  1938 செப்டம்பர், 11ஆம் நாள் சென்னைக் கடற்கரைக் கூட்டத்தில் ‘தமிழ்நாடு தமிழருக்கே!’ என்னும் முழக்கம் (இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்-போது) தந்தை பெரியார் அவர்களால் கொடுக்கப்பட்டது  உண்மைதான் என்றாலும் திருவாரூரில் நடைபெற்ற (4_8_1940) நீதிக்கட்சி மாநாட்டிலும் சேலத்தில் நடைபெற்ற நீதிக்கட்சிக் கூட்டத்திலும் (27_8_1944) “திராவிட நாடு பிரிவினை’’த் தீர்மானம் நிறைவேற்றப்-பட்டது.

மொழிவாரி மாகாணம் (1_11_1956) உருவாக்கப்படாதபோது, சென்னை மாநிலத்தில் அப்பொழுது ஆந்திரா, கருநாடகம், கேரளாவின் சில பகுதிகள் இருந்த காரணத்தால், “தமிழ்நாடு தமிழருக்கே’’ என்கிற முழக்கம் ‘திராவிட நாடு’ என்கிற முழக்கமாக முன்னெடுக்கப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

1940 ஆகஸ்ட், 4இல் திருவாரூரிலும் 1944 ஆகஸ்ட், 27இல் சேலத்திலும் நடைபெற்ற நீதிக்கட்சி கூட்டத்திலும் அந்த வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டு (1_11_1956) சென்னை மாநிலத்திலிருந்து ஆந்திரா, கருநாடகம், கேரளாவின் சில பகுதிகள் பிரிக்கப்பட்ட நிலையில் ‘தமிழ்நாடு தமிழருக்கே!’ என்னும் முழக்கத்தை தந்தை பெரியார் கொடுத்தார் என்பதே வரலாறு.

தந்தை பெரியார் நடத்திய அறப்போராட்டங்-களில் எதனைச் சிறந்த போராட்டமென முதன்மைப்படுத்துவீர்கள்?

 ஜாதியை ஒழிப்பதற்காக தந்தை பெரியார் அவர்கள் அதன் பாதுகாப்பு மூல வேர்களை ஒழிக்கும் “அழிவுப் பணி’’யில் ஈடுபட்டார்கள், கடவுளை எதிர்த்ததும் மதத்தை எதிர்த்ததும் சாஸ்திரங்களை எரித்ததும் அந்த அடிப்படையில் தான். அதன் உச்சக்கட்டமாக ஜாதியைப் பாதுகாக்கும் இந்திய அரசமைப்புச் சட்டத்தை எரிக்கும் போராட்டத்தை அறிவித்து நடத்தியும் காட்டினார்களே-அந்தப் போராட்டத்தை முக்கியமானதாகக் கருத இடம் இருக்கிறது. மற்றபடி  தந்தை பெரியார் நடத்திய ஒவ்வொரு போராட்டமும் அதன் தன்மையில் அந்தந்த காலகட்டத்தில் அவசியமானதாகவே இருந்திருக்கிறது.

ஒரு நாட்டுக் குடிமக்கள் அந்த நாட்டு அரசமைப்புச் சட்டத்தைக் கொளுத்துவது என்பது வரலாறு கேள்விப்படாத ஒன்றாகும். அந்தப் போராட்டத்தில் 10 ஆயிரம் திராவிடர் கழகத் தொண்டர்கள் ஈடுபட்டு மூன்று மாதம் முதல் மூன்றாண்டுகள் வரை கடுங்காவல் தண்டனைகள் அனுபவித்தார்கள் என்பது சாதாரணமானதல்ல. சிறையில் நிறைமாதக் கர்ப்பிணியாகச் சென்றதால், சிறையிலேயே மகவை ஈன்றார் ஒரு தாய். அந்தப் பெண் குழந்தைக்குச் “சிறைப்பறவை’’ என்று பெயர் சூட்டினார்கள் என்றால் அது சாதாரணமாதா?

ஜாதிய வெறியூட்டலில் அடுத்தடுத்து ஆணவக் கொடுங்கொலைகள் தொடர்வது பற்றி என்ன கருதுகிறீர்கள்?
அரசியலில் எந்தவித சித்தாந்தங்களும் “கோட்பாடுகளும்’’ திட்டங்களும் இல்லாதவர்கள் எளிதில் தீப்பிடிக்கும் பொருள்போன்ற ஜாதித் தீயை எளிதில் மூட்டி அரசியல் இலாபக் குளிர் காயலாம் என்கிற கோணல் புத்திக்காரர்களின் குறுக்கு வழிதான் இது. அரசு தன் கையில் உள்ள சட்டத்தை முறையாகப் பயன்படுத்தினால், இந்த ஜாதி வெறியர்கள் இருந்த இடம் தெரியாமல் போய்விடுவார்கள். தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டபேரவைத் தேர்தலில் ஜாதி, மதக்காரர்கள் கட்டிய முன்வைப்புப் பணத்தைக்கூட பெறவில்லை என்பது கவனிக்கத்தக்கதாகும்.

கல்லூரிகளில் ஜாதிக்கயிறு கட்டுவது ஜாதி மோதல்களைத் தவிர்க்கவே என்று கூறப்படுகிறதே?
ஜாதி மோதலைத் தவிர்க்க அல்ல. இது பிஞ்சுப் பருவத்திலேயே ஜாதி நஞ்சை ஊட்டும் அபாயகரமான செயல். இது குறித்து திராவிடர் கழகத் தலைவர் கல்வித் துறை செயலாளருக்குக் கடிதம் எழுதினார்; அவர்களும் ஓரளவு செயல்படுகிறார்கள்.

திருமணங்களில் ஜாதி பார்க்கும் நிலைமை மாறினாலும் ஜாதகம் பார்க்கும் நிலைமைக்குத் தள்ளப்படுகிறார்களே?
ஜாதகம் என்பது அடிப்படையற்றது;- அறிவியலுக்குப் பொருந்தாதது. இன்றும் நவக் கிரகங்களுக்குத்தான் (9 கிரகம்) ஜாதகம் சொல்லிக் கொண்டுள்ளார்கள். நட்சத்திரமான சூரியனைக் கொண்டுபோய் கிரகத்தின் பட்டியலில் வைத்துள்ளதிலிருந்தே ஜாதகத்தின் ஜாதகம் கிழிந்து போய்விட்டதல்லவா?

காந்தியாருக்கு ஆயுள் 125 ஆண்டு காலம் என்று பிரபல திருத்தணி ஜோதிடர் கிருஷ்ணமாச்சாரி சொன்னது என்னாயிற்று? ஜோதிடம், ஜாதகம் என்பதெல்லாம் சோம்பேறிகளின் வயிற்றுப் பிழைப்பு. அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்று இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவு (51கி-லீ) கூறுகிறது. அப்படிப்பார்த்தால் சட்டப்படி  தடை செய்யப்பட வேண்டிய ஒன்றே ஜோதிடம். ஜோதிடத்தை நம்பி தன் வீட்டுக் கதவைத் திறந்து போடுவோர் ஒருவரைக் காட்டுங்கள் பார்க்கலாம்.

பெண்களுக்கான இடஒதுக்கீடு வரைவுச் சட்டம்(மசோதா) கிடப்பில் போடப்பட்டு நிலுவையில் நீண்டு கொண்டே போவதற்கான காரணம் என்ன?
“எங்காவது நரிகளால், ஆடு-, கோழிகளுக்கு விடுதலை உண்டாகுமா? எங்காவது பூனைகளால், எலிகளுக்கு விடுதலை கிடைக்குமா? எங்காவது முதலாளிகளால் தொழிலாளிகளுக்கு விடுதலை உண்டாகுமா? பெண்களின் விடுதலைக்கு ஆண்கள் பாடுபடுவார்கள் என்பதும் இதுபோன்றதுதான்’’ என்று கூறியுள்ளார் தந்தை பெரியார்.

கட்சிகளைக் கடந்து பெரும்பாலான ஆண்கள், பெண்களுக்கான 33 சதவித இடஒதுக்கீட்டுக்கு எதிராக இருக்கிறார்கள் என்பதுதான் மறுக்கப்பட முடியாத பேருண்மையாகும்.

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’’ என்பது, வெறும் சொல்லலங்காரமாய்ச் சிறுத்து காணப்படுவதாகக் கருதப்படுகிறதே?
பிறப்பின் அடிப்படையில் பேதம் விளைவிக்கும் மதம் - அதன் கடவுள்கள் - அதன் சாத்திரங்கள் - ஏன் அரசமைப்புச் சட்டம் எல்லாமே “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’’ என்னும் தத்துவத்திற்கு எதிரானதே.

துருக்கியில் முஸ்தபா கமால் பாட்சா செய்தது போல, புரட்சி நடக்க வேண்டும் என்று தந்தை பெரியார் சொன்னாரே! இன்றைக்கு தமிழ்நாட்டில் பெயர்களுக்குப்பின் ஜாதிப் பட்டங்களைப் போட வெட்கப்படும் நிலையை தந்தை பெரியாரும்- _ அவர்கள் கண்ட இயக்கமும்தான் உருவாக்கியது என்பது உண்மை; இந்த நிலை வேறு மாநிலங்களில் காண முடியாது. 

அண்மைக் காலத்தில் கொள்கைத்தளம் எதுவுமே இல்லாமல் தனி ஆளாகவே சாதித்துக் காட்டுவதாகக் கூறி, புதுத் தலைவர்கள், புதுக்கட்சிகள் என்னும் போக்கில் மக்களைத் திசை திருப்புகிறார்களே...?   
அப்படிப்பட்டவர்களை மக்கள் தனிமைப்படுத்தி விட்டார்கள். அண்மையில் நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பல கட்சிகளும் தலைமை வேடம் போட்டவர்களும் முகவரி இழந்து  காணப்படுகிறார்களே! இன்னும் குறுகிய காலத்தில் அவர்களின் முகவரியும் ம(றை)றந்தே போகும்.


- நேருரையாளர்: மு.தருமராசன்


Go Back