செல்வம் தரும் தென்னை வளர்ப்பு - 16-Aug-2016 11:08:38 AM

ந்தியா, இலங்கை போன்ற வெப்ப மண்டல நிலப்பரப்புகளில் வளரும் மரம் தென்னை மரமாகும். தென்னையின் அனைத்து பகுதிகளும் பயன்மிக்கவை. இதில் தேங்காய் தென்னிந்தியச் சமையலில் முக்கிய இடத்தைப் பெறுகிறது.

தென்னை மரங்கள் காட்டு மரங்களாக இருந்ததாகவும் மலேசியா, இந்தோனேசியா தீவுகளில் இருந்து இந்தியாவுக்கு வந்ததாகவும் இந்தியாவில் கேரளாவில்தான் முதன்முதலில் தென்னை உற்பத்தியானது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இத்தீவுகளில் இருந்து கேரள கடற்கரைக்கு தென்னை நாற்றாக வரவில்லை. தீவுகளில் உள்ள தென்னை மரங்களில் உள்ள தேங்காய் நெற்றாகி தானாக விழும். இந்நெற்றை அங்கு அடிக்கிற காற்றும் பெய்கிற மழை நீரும் இழுத்துச் சென்று ஆறுகளில் கொண்டு சேர்க்கும். கடல் அலை காற்றின் திசைக்கு தக்கவாறு கரை சேர்த்தது. நம் இந்தியாவுக்கு தேங்காய் கடல் நீரில் மிதந்து வந்து கேரள கடற்கரையில் முதன்முதலாக ஒதுங்கியது. இதனால் “கடல் யாத்திரை செய்யும் கொட்டை” என்று பெயர் பெற்றது.

தென்னங்கன்றை - தென்னம் பிள்ளை என்றும் அழைப்பர். “பெத்த பிள்ளை சோறு போடாவிட்டாலும் நட்ட பிள்ளை சோறு போடும்” என்பது நம் பழமொழி; உண்மையும் கூட. இதிலிருந்து “பிள்ளை” என்னும் பாசமுள்ள பெயர் தென்னங்கன்றுகளுக்கு இருப்பதை அனைவரும் அறிய முடிகிறது.

உலக அளவில் 200க்கும் மேற்பட்ட நாடுகள் உள்ளது. அதில் சற்றொப்ப 84 நாடுகளில் மட்டும் தென்னை வளருகிறது. தென்னை வளரக்கூடிய தட்பவெப்ப நிலை, மண் வளம் சில நாடுகளில் மட்டுமே உள்ளது. இந்திய நாட்டில் குறிப்பாக தென்னிந்தியாவில் மட்டுமே தென்னை நன்கு வளர்ந்து பலன் தருகிறது. வட இந்தியாவில் தென்னை வளர்வதில்லை. அமெரிக்காவில் கிழக்குப் பகுதித் தீவுகளிலும் இந்தோனேசியாவிலும் தென்னை வளர்கிறது. சில நாடுகளில் ஒரு பகுதியில் மட்டும் தென்னை வளருகிறது.

பூமத்திய ரேகைக்கு 23 டிகிரிக்கு உட்பட்ட மித வெப்ப பிரதேசங்களில் தென்னை வளர்கிறது. தென்னை உலக அளவில் ஒரு குறிப்பிட்ட நாடுகளில் மட்டும் வளர்ந்தாலும் தென்னை சார்ந்த பொருள்கள் இளநீர், தேங்காய், தேங்காய் பூ, தேங்காய் எண்ணெய், மெழுகு, ஓலை, மட்டை, பாளை, மரச் சாமான்கள், கயிறு, பாய், விரிப்பு, நார் மற்றும் தென்னை சார்ந்த அத்தனை பொருள்களும் உலகம் முழுவதும் தேவைப்படுகிறது.

தென்னை வளரும் நாடும் குறைவு. தென்னை சார்ந்த பொருள்கள் செய்யும் நாடுகளும் குறைவு. தமிழ்நாட்டில் எல்லா பகுதிகளிலும் தென்னை வளரும் சாத்தியக் கூறுகள் அதிகம் உள்ளது. வேளாண்மையில் வருவாய் பெருக தென்னை வளர்க்க வேண்டும். தென்னை சார்ந்த தொழில் துவங்க படித்த இளைஞர்கள் முன்வர வேண்டும். உற்பத்திப் பொருள்களுக்கு சந்தையிடும் சிக்கலும் வரவே வராது.

காரணம், பூகோள அமைப்பும் தட்பவெப்ப நிலையும் தேங்காய் சந்தையிடுதலுக்கு பாதுகாப்பு அரணாக அமைந்துள்ளது. அதனால் நம்பிக்கையோடு வாய்ப்பு உள்ள இடங்களில் எல்லாம் தென்னை வளர்க்க வேண்டும். அதில் வருவாயும் உயரும். வேலைவாய்ப்பும் பெருகும்.

கோடைக் காலங்களில் நிலத்தடி நீர் குறைந்து கொண்டே போகும். ஆண்டில் சில மாதம் பெய்யும் மழை நீர், ஆறுகளில் விடப்படும் தண்ணீரால் நிலத்தடி நீர் சமநிலை அடைகிறது. நிலத்தடி நீர் எவ்வளவு உள்ளது என்பதை யாராலும் இன்னமும் கணக்கிட்டுச் சொல்ல முடியவில்லை. நாம் பாய்ச்சும் தண்ணீரில் ஒரு பகுதி மட்டும் தென்னை எடுக்கிறது. மீதி நீர் நிலத்திற்குள் சென்று நிலத்தடி நீருடன் கலந்து விடுகிறது.

தமிழ்நாட்டில் கிடைக்கும் நிலத்தடி நீரைக் கொண்டு சிறப்பாக தென்னை பயிரிட்டு மகசூல் பெற முடியும். காவேரிப் படுகைகளில் நிலத்தடி நீர் வற்றாத ஊற்றாக உள்ளது. கம்பம், தேனி போன்ற பகுதிகளில் நிலத்தடி நீர் சிறப்பாக உள்ளது. கிடைக்கின்ற நீரைப் பயன்படுத்தி முறைப்படுத்தி தென்னை வளர்க்க வேண்டும்.

மா, பலா, கொய்யா, சப்போட்டா போன்ற பழ மரங்கள் ஒரு குறிப்பிட்ட பருவத்தில் (சீசனில்) பலன் தருபவை. ஒரே நேரத்தில் பூத்து காய்த்து ஆண்டில் ஒரு முறை பலன் தரும். ஆனால் தென்னை அவ்வாறு அல்ல. வேலை ஆட்கள், தண்ணீர் பாய்ச்சல், பராமரிப்புச் செலவு அத்தனையும் தென்னை சாகுபடியோடு ஒப்பிடும் போது அதே செலவுகள்தான். அதில் எந்த வேறுபாடும் இல்லை. பழங்கள் அதிகமாக உற்பத்தி ஆகும் போது விற்பனைச் சிக்கல் ஏற்படுகிறது. கொய்யா, சப்போட்டா போன்ற பழம் பழுத்த சில நாட்களில் விற்று விட வேண்டும். இருப்பு வைத்தால் புழுக்கள் குடியேறி அழுகிவிடும். ஆனால் தேங்காயை குறிப்பிட்ட காலம் இருப்பு வைத்து விற்க முடியும். தேவைப்படும் பகுதிக்கு நம்பிக்கையோடு அனுப்ப முடியும். இனி, தென்னை மரங்களை வளர்க்கும் முறைகளையும் அதன் பயன்களையும் விரிவாகக் காண்போம்.

தென்னம் பிள்ளை நடுவது ஆடி மாதம் சிறந்தது என்ற கருத்தை பலர் கொண்டுள்ளனர். ஆடி அமாவாசை, ஆடிப் பதினெட்டு, ஆடி வெள்ளி ஆகிய நாட்களில் தென்னம் பிள்ளைகளை அதிகமாக நடுவது வழக்கம். காரணம் ஆடி மாதம் பருவ மழை பெய்யத் துவங்கும். அதுமட்டுமல்ல, வெயிலின் கடுமையும் குறைவாக இருக்கும். அதனால் நட்ட பிள்ளை பழுது இல்லாமல் பிழைத்துவிடும். அதனால் ஆடி மாதம் சிறந்தது எனத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.

தென்னை மரங்களில் உள்ள இளநீர் சில மரங்களில் மிகவும் சுவையாக இருக்கும். சில மரங்களில் உள்ளவை உப்பு கலந்திருக்கும். சில மரங்களில் ருசியின்றி இருக்கும். இது இனத்தைப் பொறுத்து அமைந்துள்ளது. குரங்கு, மர நாய், எலித் தொல்லைகள் அதிகம் உள்ள இடங்களில் உப்பு ருசி கலந்த இன மரங்களின் நெற்றுக்களை முளைக்க வைத்து பிள்ளை தயார் செய்து நடலாம். 

சுவையான இளநீர் உள்ள மரங்களின் குரும்பைகளை எலிகளும் மரநாய்,குரங்குகளும் நெருங்க இயலாத, ஆள் நடமாட்டம் உள்ள இடங்களிலும் வீட்டுத் தோட்டங்களிலும் நட்டுப் பயிரிடலாம். இடம் அறிந்து தென்னம் பிள்ளைகள் நட்டு தோப்பாக்கினால் காட்டு விலங்குகளின் அழிவிலிருந்து கணிசமாக காப்பாற்ற முடியும்.

சிலவகை மரங்களில் ஆண், பெண் மரம் எனத் தனித் தனியாக உள்ளது. ஆண் மரத்தில் ஆண் பூக்களும் பெண் மரத்தில் பெண் பூக்களும் உள்ளது. ஆனால் தென்னை மரங்களில் ஆண், பெண் என்று தனித்தனி மரங்கள் இருப்பதில்லை. பெரும்பாலும் தென்னை என்றதும் நம் நினைவில் வருவது இளநீரும் தேங்காயும்தான். இளநீர் மிகுந்த மருத்துவ குணம் கொண்டது. வீட்டுக்குப் பக்கத்தில் தென்னை மரம் இருந்தால் எதிர்பாராமல் வந்த விருந்தினரை உபசரிக்கக் கடினம் இல்லை. இளநீர் கொடுத்து உபசரிக்கலாம். இதனால்தான் மகாகவி பாரதியார், “காணி நிலம் வேண்டும்” என்ற பாட்டில் “பத்து பன்னிரண்டு தென்னை மரம் பக்கத்தில் வேணும்” என்றார் போலும்.

தேங்காய் மிகவும் அழகான அமைப்பாக இயற்கையின் படைப்பில் அமைந்திருக்கிறது. மேல் தோல் உரிமட்டையை உரித்து எடுத்து உள்ளே இருக்கும் கெட்டியான கொட்டாங் குச்சி (சிரட்டை)யை இரண்டாக உடைத்தால் கபடமற்ற வெண் புன்னகை. அந்தச் சிரிப்புக்கு அடிமையாகதவர் யார் உளர்? தேங்காயில் நார்ச்சத்து மிகுந்து காணப்படுகிறது. 

குழந்தை பிறந்ததும் மூக்கும் முழி(விழி)யுமாக இருக்குது என்பார்கள். அதுவும் பெண் குழந்தைகளுக்கு மூக்கும் விழியும் தனி அழகைத் தருகிறது. அதேபோல தேங்காய்க்கும் மூக்கு, முழி, குடுமி அனைத்தும் உண்டு. ‘மூக்கு’ என்றதும் சிலர் வியக்கக் கூடும். தேங்காயின் கண்ணோடு சேர்ந்த பகுதியை ‘குடுமி’ என்று கூறுவர். அது நீளமாக இருக்கும். ஆனால் உண்மையில் கண்களுக்கு மத்தியில் இருப்பது ‘மூக்கு’ ஆகும். பின்பக்கம் இருக்கும் சிறிய பகுதிக்கே ‘குடுமி’ என்று பெயர். மனிதனை எடுத்துக் கொள்ளுங்கள். இரு கண்களுக்கும் நடுவில் மூக்குதானே இருக்கிறது. குடுமி கட்டுகிறவர்களைக் கவனியுங்கள். மூக்குக்குப் பின்னால்தானே குடுமி இருக்கிறது. ஆக தேங்காயின் கண்களுக்கு நடுவில் இருப்பது ‘மூக்கு’, ‘குடுமி’ அல்ல.

தென்னை மரங்களிலிருந்து தேங்காய் அறுவடை செய்ததும் மாம்பழக் குவியல் போன்று குவித்து விடுவதைப் பார்க்கிறோம். அவ்வாறு செய்யும் தேங்காய்கள் அதிக நாட்கள் கெடாமல் வைக்க முடிவதில்லை. சீக்கிரம் அழுகி வீணாகி விடுகிறது.

ஒரு மாதத்திற்கு மேல் போட்டு வைத்து பயன்படுத்த நினைப்பவர்கள், தேங்காய்களை கண்பாகம் மேல் நோக்கி இருக்கும்படி அடுக்கி வைத்தால் ஆறு மாதம் ஆனாலும் தேங்காய் அழுகாது வைத்திருந்து பயன்படுத்தலாம். இவ்வாறு கண்பாகம் மேல்நோக்கி இருக்கும்படி வைக்கும் தேங்காய் நீர் சுண்டி போய் எண்ணெய் அளவு அதிகம் இருக்கும். கண்பாகம் கீழ்நோக்கி இருந்தால் அல்லது சாய்வாக இருக்குமானால் தேங்காயின் உள்பகுதியில் உள்ள நீர் கண் பாகத்தில் தேங்கி அழுக ஆரம்பிக்கும். கண்பாகம் அழுக ஆரம்பித்தால் தேங்காய் முழுவதும் சீக்கிரமாக அழுகி கெட்டுவிடும். துர்நாற்றம் வீசும்.

அதே போல, தென்னை மரத்தின் மட்டைகளின் இரு விளிம்புகளையும் இணைத்து மரத்தோடு பலமாக ஒட்டிக் கொண்டிருக்கும் சவ்வு போன்ற ஒரு பாகம், சல்லடை போன்றும் வலை போன்றும் பின்னிப் பிணைந்து இருக்கும். இதை ‘பன்னாடை’ என்பர். தென்னைக்கு உயிர் நாடியாக விளங்கும் பன்னாடைகள் இரத்த ஓட்டம் இல்லாத ஒரு பகுதியாகும். 

நம் உடல் உறுப்புகளில் முக்கியமான ஒன்றாக விளங்கும் தலை முடிக்கு ரத்த ஓட்டம் இருப்பதில்லை. ஆனால் உடல் நலத்துக்கு அவசியம் தேவையானது. பன்னாடைகள் தென்னையின் மேல் மண்டைப் பகுதியை சூரிய வெப்பம் தாக்காதபடி பாதுகாக்கும் அரணாக உள்ளது. குறிப்பிட்ட காலம் மரத்திற்கு பக்க பலமாக இருந்த முக்கிய உறுப்பான பன்னாடை மட்டையை பாதுகாத்து, பாளையைப் பாதுகாத்து மரத்திற்கு உறுதுணையாக இருந்து, குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு மரத்தின் பிடியிலிருந்து விடுபடுகிறது. கருவிலிருந்து மட்டையோடு உருவாகி வயதான மட்டை விழும் போது, பன்னாடைகளும் சேர்ந்து விழுகிறது, சிற்சில மரத்தில் தொங்கிக் காற்றில் அசைந்து கொண்டிருக்கும். பன்னாடைகள் வெகுவாக நெருப்பு பிடிக்கக் கூடியது. மழைக்காலத்தில் அடுப்பு பற்றவைக்க பன்னாடைகளை பத்திரமாக வீடுகளில் சிறுசிறு கட்டுகளாகக் கட்டி பாதுகாத்து வைத்து பயன்படுத்துகிறார்கள். சிலர் பன்னாடைகளை பதநீரில் தூசிகளை அரிக்கும் அவசர அரிப்பாகப் பயன்படுத்துகிறார்கள்.

மேலே தென்படும் கெட்டியான ஓடு போன்ற நீளமாக இருக்கும் பகுதியை ‘பாளை’ என்பர். அதைக் கொண்டு விசிறி, பெட்டி போன்றவைகளைச் செய்கிறார்கள். பாளைகள் சற்று சாய்வாக இருக்கும் போது பின்னலாக இருக்கும். பன்னாடையைக் கிழித்துக் கொண்டு வெளியே வரும்.

விரியாத பாளைகள் உருண்டுத் திரண்டு நீளமாகக் காணப்படும். உள்ளே இருக்கும் பூக்கள் வளரும் போது பாளை விரிசல் கொடுத்து நடுப்பகுதி கீறல் கொடுக்கிறது.  பாளையை ஊற வைத்து கீறி, வேலி கட்டப் பயன்படுத்துகிறார்கள். வெற்றிலைக் கொடிக்கால் விவசாயிகளுக்கு கொடியைக் கட்ட பாளை முக்கியப் பொருளாகும்.

பெற்ற பிள்ளையை நோய் நொடியின்றி வளர்ப்பது போலத்தான் தென்னை வளர்ப்பும். முதலில் சுற்றுச்சூழல் தூய்மை அவசியம். தென்னை மரத்தின் காய்ந்து போன பாளை, பன்னாடை, கூராஞ்சி போன்றவற்றை எடுத்து விடுவதற்கு ‘அசடு’ பார்த்து சுத்தம் செய்தல், சிரை எடுத்தல் என்று கூறுவர். தேங்காய் பறித்த கூராஞ்சி, காய்ந்த பாளை, பன்னாடை, காய்ந்து போன மட்டை இவைகள் அடைசலாக இருக்கும். இவற்றில் சிலந்திகள் கூடு கட்டிவிடும். இதனால் சூரிய வெளிச்சம் தடை ஏற்படும். வெறும் கூராஞ்சிகள் சீக்கிரம் காய்வது இல்லை. பச்சையாக உயிருடன் இருக்கும். வேர்கள் கிரகித்து அனுப்பும் உணவை கழிவுகளை எல்லாம் பங்கு போட்டுக் கொள்வதால் மேல் பாளைக்கும் குச்சங் காய்களுக்கும் போதிய அளவில் சத்துகள் போய் சேராமல் குரும்பைகள் கொட்டி விடுகிறது. மட்டை இடுக்குகளில் கழிவுகள் தங்கியிருந்தால் எலிகள், வண்டுகள் கூடு கட்டி குட்டி போட்டு, குடும்பம் நடத்த ஆரம்பித்து விடும். எனவே சருகாய் காய்ந்து தொங்கும் பன்னாடைகளையும் வெறும் கூராஞ்சிகளையும் பாளைகளையும் ஆண்டுக்கொரு முறை அவற்றை அகற்றி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். 

தென்னையின் இளநீர், குரும்பை, பூக்களைத்தான் எலிகள் தின்று சேதம் ஏற்படுத்துவது நமக்குத் தெரியும். தென்னங் கன்றுகளையும் எலி தின்று வீணாக்குகிறது. எலிகளில் நூற்றுக் கணக்கில் இனங்கள் உள்ளது. சிலவை மரங்களில் உள்ள பொந்துகளில் வாழும். சிலவை அடர்த்தியாக உள்ள மரக்கிளைகளில் கூடு அமைத்து வாழும். 

அதே போல பூமியை துளை இட்டு நிலத்தில் உள்ள கிழங்கு, மரம், செடிகளின் வேர்களைத் தின்று வாழும் ஓர் எலி இனம் உள்ளது. பூமியைத் துவாரம் இட்டுக் கொண்டே செல்வதால் இதற்கு ‘துரப்பான்’ என்று பெயர். துரப்பான் எலிகள் தென்னம் பிள்ளைகளைச் சுரண்டி, துவாரம் இட்டு உள்ளே இருக்கும் சுவையான குருத்தைச் சாப்பிட்டு விடுகிறது. முளைத்து வரும் இளம் வேர் பகுதியையும் தின்கிறது.

பசுமையாக வளர்ந்து வந்து கொண்டிருந்த தென்னம் பிள்ளை திடீரென வாடினாற் போன்று தென்படும். அருகில் சென்று பார்த்தால் எந்த விதமான தாக்குதல் அடையாளங்களும் பிள்ளைகளில் தென்படாது. குழியின் ஓரங்களில் பார்த்தால் எலி குறுமண் எங்கேயாவது ஓரிரு இடங்களில் தென்படும். துரப்பான் எலி நடமாட்டம் கண்டு கொள்ளவே முடியாது. தென்னம் பிள்ளையைச் சுற்றி கவனமாக மண் வெட்டியால் மண்ணைத் தோண்டி அப்புறப் படுத்தும் போது வளை தென்படும். கூர்மையாக பார்த்தால் பிள்ளையின் மண்டைப் பாகத்தைத் தின்று காயப்படுத்தி இருக்கும். சில பிள்ளைகள் செத்துப் போய் இருக்கும். துரப்பான் எலி மூக்கு நீளமாகவும் உருவத்தில் மூச்சிறுவின் அமைப்பில் தென்படும். நிலத்திலேயே குழி தோண்டி வாழ்ந்து இன விருத்தி செய்து கொள்வதால் குழி எலி என்று மற்றொரு பெயரும் உண்டு. நஞ்சை நிலங்களில் இத்தகைய எலிகளால் சேதம் அதிகம்.

தென்னம் பிள்ளையைத் தாக்கும் எலிகளை அழிக்க முதலில் வளைகளை வெட்டி அழிக்க வேண்டும். தென்னம் பிள்ளைகளைச் சுற்றி எலி மருந்துகளை தின்பண்டங்களில் கலந்து வைக்க வேண்டும். வயல் வரப்புகளாக இருந்தால் தஞ்சாவூர் கிட்டு வைத்தும் கலயப் பொறி வைத்தும் எலிகளைப் பிடித்து ஒழிக்கலாம். தென்னம் பிள்ளைகளைச் சுற்றி புற்கள் மண்டாமல் கவனித்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் எலியின் தாக்குதலைத் தவிர்க்கலாம்.

தென்னை மரங்களைத் தாக்கும் வண்டுகளில் கருப்பு கூன் வண்டுகள் முக்கியமானது. இதற்கு குருத்து வண்டு, கருப்பு கூன் வண்டு, காண்டாமிருக வண்டு என்று பல பெயர்கள் உண்டு. இவ்வண்டுகளால் தென்னையின் வளர்ச்சி வெகுவாக பாதிக்கிறது. கருப்பு கூன் வண்டுகள் தென்னை மரங்களின் குருத்துப் பகுதி அதாவது செங்குத்தாக வளர்ந்து வரும் விரியாத மட்டைகளின் அடிப்பகுதியில் ஓட்டையிட்டு உள்ளே இருக்கும் லேசான சுவையான குருத்துப் பகுதியைச் சாப்பிட்டுக் கொண்டு கீழ்நோக்கிச் செல்லும். சாப்பிட்ட சக்கைகளைத் துவாரம் வழியாக வெளியே தள்ளும். சக்கைகளைப் பார்த்து வண்டு தாக்கி இருப்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

காய்ந்த ஆமணக்கு (கொட்டமுத்து) விதைகளை எடுத்து நன்றாகப் பொடி செய்து ஒரு மண் பானையில் அதை பாதி அளவு தண்ணீர் வைத்து அதில் பொடி செய்த ஆமணக்கு விதைகளை இட்டு ஊற விட வேண்டும். ஆமணக்கும் புண்ணாக்கும் பயன்படுத்தலாம். ஓர் ஏக்கருக்கு 10 இடத்தில் ஊற வைத்தால் போதுமானது. ஆமணக்கு விதை ஊறிய நீரிலிருந்து ஒருவித நெடி (வாசனை) வண்டுகளை கவர்ந்து இழுத்துக் கொள்கிறது. இதனால் நீரில் இவ்வண்டுகள் விழுந்து தத்தளிக்கிறது. நீரில் இறகுகள் நனைவதால் பறக்க முடிவதில்லை. பானையில் ஏற முடியாமல் வழுக்கி விழுவதால் மேலே வர முடியாமல் பானைக்குள் விழுந்து தத்தளிக்கிறது.

மேலும் மண்ணெண்ணையை பானைக்குள் ஊற்றி விட்டால் வண்டுகள் செத்து விடுகிறது. வேறு பூச்சிக் கொல்லிகளையும் ஊற்றி சாகடிக்கலாம். பானை தொடர்ந்து தோப்பில் இருக்க வேண்டுமாகில் வண்டுகளை வெளியே எடுத்துக் கொல்லவும். குழந்தைகள் நடமாடும் தோப்புகளில் சற்று பாதுகாப்பு அவசியம்.

தாக்குதல் நடந்த பின் பூச்சிகளை ஒழிக்க நினைப்பதை விட வராமல் தடுக்கும் முறைகளை கையாள்வது நல்லது. ஆற்று மணல் சாணி புழுக்களுக்கு எதிரி. ஆற்று மணல் புழுக்களின் தலையின் கீழ் உள்ள இடுக்குகளில் சிக்கிக் கொள்வதால் புழுக்கள் திணறி மடிந்து விடும். அதனால் தென்னம் பிள்ளையை ஒட்டி ஆற்று மணல் இட்டு நாட்டு எரு போடுவதினால் தென்னம் பிள்ளைகளை சாணி புழு தாக்குதலிலிருந்து காப்பாற்ற முடியும். தென்னையின் வளர்ச்சியும் அதிகரிக்கும்.

தென்றல் வீசும் காற்றையும் தாகம் தீர்க்கும் இளநீரையும் உணவில் சுவையும் சத்தும் கூட்டவல்ல தேங்காயும் அதன் எண்ணெய்யும் உடல் வலுவிற்கு பயன்படும் கல்லையும் விசிறி, கிடுகு, பெட்டி, கீற்று ஆகியவற்றை செய்ய உதவும் ஓலையும் அடுப்பெரிக்கப் பயன்படும் விறகு, பன்னாடை, மட்டைகளையும் தன்னகத்தே கொண்டுள்ள தென்னை மரம் இயற்கை நமக்களித்த மாபெரும் கொடை. எனவே பெத்த பிள்ளை சோறு போடாவிட்டாலும் நட்ட பிள்ளை (தென்னம் பிள்ளை) சோறு போடும் என்பது மறுக்க முடியாத உண்மை.

- டாக்டர் வா.செ.செல்வம், தென்னை ஆராய்ச்சியாளர்


Go Back