நான் ஒரு தனிமரம் அல்ல - 22-Oct-2017 12:10:36 PM

ஒரு வைத்தியரின் சீடன் காய்கறி வாங்கப் போனானாம். பதார்த்த குணசிந்தாமணியைக் கரைத்துக் குடித்திருந்தவன் அவன். காய்கறிச்சந்தையில், பூசணிக்காய், கத்தரிக்காய், அவரை, பாகல், புடல், பீர்க்கு, சுரைக்காய், வாழைக்காய், வெண்டை என்று குவித்துப் போட்டிருந்தார்கள். பீர்க்கங்காய் பித்தம், பூசணிக்காய் வாதம், சேனைக்கிழங்கு வயிற்றுக்கு ஆகாது என்று ஒவ்வொன்றாகக் கழித்துதுக் கட்டினான் சீடன். கடைசியில் ஒன்றும் வாங்காமலேயே வெறும் பையோடு வீடு திரும்பி, குருபத்தினியிடம் ஏச்சு வாங்கியதாகக் கதை!
தேர்ந்து முதிர்ந்த வைத்திய சாத்திர ஞானம் ஒன்றிலேயே ஆழ்ந்துவிட்ட சீடனுக்கு, வீட்டில் எப்படியும் சமையல் ஆகவேண்டுமே என்ற விஷயம் மூளையில் படவில்லை. ஒரே ஒரு விஷயத்தில் நிபுணத்துவம் பெற்று விடுவதால் வருகிற வினை இது! பிறருடைய கோணத்திலிருந்து பார்த்தாலல்லவோ உண்மை புலனாகும்?
நானெனும் அகந்தை, அனைத்துவித மனிதர்களையும் தொற்றிக்கொள்ளுகிற ஒரு காய்ச்சல்! தன்னுடைய சிறப்பு ஆற்றலைக் கொண்டு ஒரு வட்டச் சிறை அமைத்து மிகுந்த கர்வத்தோடு அதற்குள் தன்னை அடைத்துப் போட்டுக் கொள்கிறான் மனிதன். வெளியுலகத்தில் என்ன நடக்கிறது என்பதை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. இந்த வியாதி முற்றிப் போய்விட்டால், ஆசாமி, எல்லாரும் தன்னிடம் வந்து பரிவு காட்டி அனுதாபப்பட வேண்டும் என்று துடிக்கிறான்! பிறர் ஐயோ பாவம் இரக்கப்பட வேண்டுமென்பதற்காக, தன் துயரங்களையெல்லாம் வரிசையாக அடுக்கி ஊர்வலம் விடுகிறான்! கட்டை அவிழ்த்து செம்புண்ணாக இருக்கும் காயங்களை காட்டுகிறான். வியாதியில் விழுந்துவிட்டாலோ, பரமசந்தோஷப் படுகிறான், நாலுபேர் நலம் விசாரிக்க வருவார்களென்று!
இந்த தற்பெருமை நோய் சிறந்த கலைஞர்களையும் விஞ்ஞானிகளையும் தத்துவ ஞானிகளையும் அதிகமாகப் பீடிக்கக் கூடியது. பால் உணர்ச்சி உயிரினங்களின் தொடர்ச்சிக்கு மிகவும் அவசியமென்று இயற்கை அதைக் கொஞ்சம் மிகையாகவே உயிரிகளில் பொழிந்து விட்டிருக்கிறது. காம உணர்ச்சி மேலிட்டால் கொலை முதலிய குற்றங்கள் நிகழ்ந்தாலும் குற்றமில்லை, இனப்பெருக்கம் தடையின்றி நடைபெற வேண்டும் என்று இயற்கை கருதிவிட்டதாகத் தோன்றுகிறது!
தற்பெருமைக்கும் தலைக்கணத்திற்கும் எப்படி ஏதேனும் இரகசியத் தேவை இருக்கக் கூடுமோ?
தனிச்சிறப்பு உடைய ஒருவன் தன்னுடைய துறையில் நிபுணத்துவம் அடையப் பெற்றபின், அதைக் கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டு, பார்வையை வேறு பக்கங்களிலும் செலுத்த வேண்டும். தன்னுடைய பிரியங்களுக்கும் நலன் ஈடுபாடுகளுக்கும் அப்பால் நிற்கும் விஷயங்களையும் 
உலகம் உங்கள் சொந்த வாழ்க்கையைப் பற்றி அவ்வளவு அதிகமாக ஈடுபாடு காட்டுவதில்லை. இருந்தாலும் நீங்கள், உங்கள் வீட்டில் உள்ளோர், அக்கம் பக்கத்துக் காரர்களோடு, தெருவில் வசிக்கும் சிலரோடும் சிலசமயம் பேச்சுக் கொடுக்கிறீர்கள். சில பிரபல இசைக் கலைஞர்களையும் அமைச்சர் ஓரிருவரையும் இலக்கியப் படைப்பாளர்களையும் பத்திரிகை ஆசிரியர்களையும் பெரிய தொழிலதிபர் ஓரிரண்டு பேர்களையும் சந்திக்கிறீர்கள். இந்த மனித உறவுகளைச் சேர்த்து உங்கள் வாழ்க்கை அனுபவம் என்றும் கூறுகிறீர்கள்! இது போதுமா?
நம்மில் பலர், சிறிய சிறிய சொந்தக் கனவுகளைப்  பின்பற்றிச் சென்று, வெளியுலகத்தை மறந்துவிடுகிறோம். விழித்துக் கொள்ளும்போது, வாழ்நாள் அநேகமாகத் தீர்ந்துவிட்டது என்றுணர்ந்து திகைக்கிறோம். ஆகா, வாழ்க்கையின் சுவைமிக்க சுளைப்பகுதிகளை ருசி பார்க்கத் தவறிவிட்டோமே என்ற கழிவிரக்கம் மேலிடுகிறது!
தன் வாழ்வில் முந்திரிக்கொட்டை போல் துருத்திக் கொண்டிருக்கும் சில பற்று பாசங்களிலிருந்து விடுபட்டு ஒரு சமச்சீர் நிலையை அடைவதற்குத் துணை புரிகிறது பண்பாடு. பிற மனிதர்களோடு பரிவு காட்டி அவர்களைப் புரிந்து கொள்வதிலுள்ள சுகம் புரிய வருகிறது. ஏகாந்த வாழ்விலுள்ள அபாயத்தைக் குறித்து அவனை எச்சரித்து தடுத்தாட்கொள்ளுகிறது பண்பாடு!
வாழ்க்கை எவ்வளவோ பரந்து விரிந்தது என்பதை மறக்கலாமா? நம்முடைய ‘‘தனிச்சிறப்பு வல்லுநர்த்தனமாகிய’’ பொந்துக்குள்ளிருந்து வெளியே வந்து, உலகின் விசித்திர அழகுகளைக் கண்டு களிக்க வேண்டும்! ஆடிட்டிங் நிபுணர் அலுவலகத்தை விட்டு வெளியே காலடி எடுத்து வைத்ததும், தண்ணீரை விட்டகன்ற மீனாகத் துடிதுடித்துப் போவதைக் காண்கிறோம்! உடனே, பழைய பொந்துக்குள் சென்று பதுங்கிக் கொண்டால்தான் அவருக்கு நிம்மதி!
எத்தனை கோடி
இன்பம் வைத்தாய் & எங்கள்
இறைவா, இறைவா
இறவா & ஓ (எத்தனை)

என்று மெய்மறந்து பாடுகிறார் மகாகவி சுப்பிரமணிய பாரதியார்!
கோடி கோடியாகக் கொட்டிக்கிடக்கும் வாழ்க்கை இன்பங்களில் ஒரு சிலவற்றையேனும் ‘‘உப்புப் பார்த்து’’ அனுபவிக்க முடியாத வாழ்க்கை, என்ன வாழ்க்கை?
சிறந்த பெரியோர்களை & ஆடவர் பெண்மணிகளை சந்தித்துப் பழகலாம்!
சமுதாயத்தின் பல்வேறு மட்டங்களில் வாழ்வோரோடு பழகலாம்!
வெவ்வேறு நிலப்பகுதிகளின் அழகை அனுபவிக்க பயணத்தின் ஆனந்தத்தைத் தேடிச்செல்லலாம்.
ஆன்மீகம், தத்துவம், நுண்கலைகள் சமயம் ஆகியவற்றின் ஊற்றுக்கண்கள் புத்தகங்களே! அந்தப் புத்தகங்களை இயன்றளவு படித்து இன்புறலாம். நண்பர்களோடு சிறிது தனிமையையும் மேற்கொண்டு சுவைக்கலாம்!
இன்பங்களைத் துய்ப்பதற்கு கல்விப்பயிற்சி
பிறவிக் குணத்தை மாற்றியமைக்கூடிய திறன், இடைவிடாத பயிற்சியினால் கிட்டுகிறது. சர்க்கசில், மிருகங்களும் பறவைகளும் என்னென்ன வித்தைகளையெல்லாம் தப்பு இல்லாமல் செய்து காட்டுகின்றன! கரடி, மோட்டார் சைக்கிள் ஓட்டி ‘வட்டம்’ சுற்றுகிறது! யானை ‘நாட்டியம்’ ஆடுகிறது. தன் பிளந்த வாய்க்குள் புகுகின்ற மனிதத் தலையைச் சிங்கம் கடிக்காமல் இருக்கிறது! கிளி, துப்பாக்கி வெடிக்கிறது! எல்லாம் பயிற்சியின் பலன்தான்!
பையன்கள் பண்ணுகிற விஷமம் நமக்குத் தெரிந்தது தான். காட்டு மிருகங்களிலேயே படுபோக்கிரித் தனமானது மனிதச் சிறுவன் தான் என்கிறான் பிளேட்டோ!. பட்டணத்தானும் பட்டிக்காட்டானும் இராணுவத்தில் சேர்ந்தால், பயிற்சி அவர்களை தேசபக்த வீரதீரர்களாக்கிவிடுகிறது. புலியைக்கூடப் பயிற்சியினால் பூனைபோல் கூட்டில் சாதுவாக நடமாடும்படி செய்யலாம். கல்வியினால் ஆகாத காரியம் ஒன்றுமே இல்லை.
உயர்தர கல்வி நிலையங்களில் குழந்தைகளைச் சேர்த்து படிக்க வைக்கிறோம், புகழ்பெற்ற ஆசிரியர்களிடமிருந்து கற்றுக் கொள்வதைவிட அதிகமாக உடன் படிக்கும் சிநேகிதப் பையன்களிடமிருந்து தெருச்சுவர்களில் ஒட்டியிருக்கும் விளம்பரங்களிலிருந்தும் கற்றுக் கொள்ளுகிறார்கள் நம் சிறுவர் சிறுமியர். அம்பு எய்தல், கிரிக்கெட், துப்பாக்கி சுடுதல், தூண்டி மூலம் மீன் பிடித்தல், குதிரை சவாரி, துடுப்பால் படகு வலித்தல் என எல்லாக் காரியங்களும் பையனுக்கு விசாலமான கல்வியைப் போதிக்கின்றன. செஸ் விளையாடுதல், சீட்டு ஆட்டம், நாடகம் போடுதல் & இவற்றில் ஈடுபடும் பையன்கள், குறி கணக்கியல் குறைந்த மதிப்பெண் தான் வாங்கக்கூடும். ஆனால் பல விஷயங்களில் ஈடுபட்டுப் பலவிதப் பயிற்சிகளையும் திரட்டுகின்ற பையனுக்கே, வாழ்க்கையில் முன்னேற அதிக வசதியும் வாய்ப்பும் கிட்டுகின்றன. ஐரோப்பிய சமுதாயத்தில் ‘நாட்டியம்’ நன்றாக தெரிந்த இளைஞன், செல்வாக்கு நிறைந்த உயர்மட்டத்து வட்டாரங்களில் வெகு சுலபமாகப் புகுந்துவிடமுடியும். வாழ்க்கையில் முன்னேற எத்தனையோ வாசல்கள் திறந்துவிடுகின்றன!
பயணத்தால் சிலருக்குப் பண்பாடு வளர்கிறது. உயிரியல், தாவர இயல் போன்ற இயற்கை ஆராய்ச்சியில் ஈடுபாடு கொண்டவர்கள், மாலுமிகள், புதியன கண்டுபிடிக்கும் புதுமைப்பித்தர்கள், அயல்நாடுகளுக்கு செல்லும் தூதர்கள், ஒற்றர்கள், சமயப்பிரசாரகர்கள் ஆகியோர் பிறவியிலேயே பயண ஆர்வங் கொண்டவர்களாக விளங்கக் காண்கிறோம்.
பல மொழிகள் கற்றவர்களும் பலநாடுகள் சுற்றியவர்களும், பல தொழில்களில் பயிற்சி பெற்றவர்களும், பலநாடு நகரங்களில் நண்பர்கள் வாய்க்கப் பெற்றவர்களும் மும்மடங்கு பெரிய மனிதர்களாகி விடுகிறார்கள். எதையும் ‘‘எடைபோடும்’’ திறன், அவர்களிடம் முளைத்து வளர்ந்துவிடுகிறது!. 
பட்டணங்களில் வாழும் சிறுவர் சிறுமியர் கண்ட கண்டவர்களோடும் பழகவேண்டி வருவதால், அறிவுக் கூர்மை பெற்று விளங்குகிறார்கள; அவர்களை யாரும் ஏமாற்ற முடியாது. இனிமையாகவும் மரியாதையாகவும் பேச்சுக் கொடுக்கக் கற்றுக் கொள்ளுகிறார்கள் விதவிதமான மனிதர்கள் ‘‘ஒரு மாதிரியாகப்’’ பார்க்க மாட்டார்கள். நம்மைப் போன்ற ஈடுபாடுகளை கொண்ட பிறரை சந்திப்பதற்கு நகரங்களில்தான் அதிக வாய்ப்பு இருக்கும்.
பட்டண வாழ்க்கையில், அமைதியான பழக்கவழக்கங்கள் படிகின்றன! உலகம் தெரிந்தவர்கள் அப்படித்தான் நடந்து கொள்ளுவார்கள். பாசாங்கு தேவைப் படுவதில்லை. பெரிய பெரிய மனிதர்களையெல்லாம் நகரத்தில் தற்செயலாக சந்தித்து விடுகிறோம்.  எளிய முறையில் பேசிப் பழகுவார்கள். இவரா அந்தப்புகழ்பெற்ற நாவலாசிரியர், இவரா அந்த அற்புத நடிகர், இவரா அந்த கீர்த்திமிக்க ஓவியர் திலகம் என்று நாம் வியப்படைவோம்.
உண்மையிலேயே பெருமைமிக்க கலைஞர்களும் அறிவியலாளர்களும் தொழிலதிபர்களும் ஆடம்பரமாக உடையணிவதில்லை. அவர்களுடைய தோற்றத்திற்கும் உண்மைப்  புகழுக்கும் தொடர்பே இல்லை என்னும்படி இருக்கும். பரம்பரைச் செல்வர்களுக்கும் புதுப்பணக் காரர்களுக்கும் நடையுடை பாவனைகளில் வித்தியாசம் காணப் படுகிறதல்லவா, அது போலவே தான்! பெரிய பெரிய பட்டங்களும் கௌரவ விருதுகளும் முதல்தரக் கலைஞர்களுக்கோ அறிஞர்களுக்கோ தேவைப் படுவதில்லை. திரு, திருமதி என்று சொல்லுவதே போதும். அந்த ‘திரு’ அடைமொழிக்கு முன்னால் ‘டாக்டர்’ பட்டங்களும் ‘கலைமாமணி’ ‘சாம்ராட்’ ‘சக்கரவர்த்தி’ ‘பேரரசு’ முதலான படாடோப விருதுகளும் ‘மாண்புமிகு’ ‘மாட்சிமை தாங்கிய’ ‘மேன்மை தாங்கிய’ ‘ஸ்ரீகோடிஸ்ரீ’&க்களும் ஒளியிழந்து மங்கிவிடக் காண்போம்!.
பட்டண வாழ்க்கையில் சில சமயம், அற்பவிஷயங்கள் பெரிது படுத்தப் படுகின்றன. பொரித்த அப்பளம் சற்றே பொன்நிறம் குறைந்து விட்டால், ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இஸ்திரி போட்ட சட்டையிலோ வேட்டியிலோ ஒரு சிறிது சுருக்கம் விழுந்திருந்தால், போச்சுது காரியம்! காலையில் காபி, ஒரு நிமிஷம் தாமதமாகி விட்டால், கூரை இடிந்து விடும்படியாகச் சத்தம் போட்டு விடுவார்கள்! இந்தவிதமான உணவு, உடை முதலிய சில்லறை விஷயங்களில், ஒரு நடுவுநிலைக் கொள்கையை அனுசரிப்பதே, சிறந்த நாகரிகம் என்று தோன்றுகிறது! எல்லாரும் அவரவர்களுடைய சில்லறை விருப்பு வெறுப்புகளைப் பெரிதுபடுத்திக் கூவ ஆரம்பித்துவிட்டால், உலகம் அமைதியற்ற நரகமாகிவிடும்!.
மகாத்மா காந்தி எங்கோ சாபர்மதிக் குடிசையில், ஒதுங்கி வாழ்ந்து வந்தார். தினசரி பெரிய பொதுக்கூட்டங்களுக்குச் சென்று சொற்பொழிவாற்றுவதில்லை. ஒருவர்பின் ஒருவராகச் சிலர் அவரைச் சந்தித்துக் கருத்துப் பரிமாற்றம் செய்து செல்லுவார்கள், அவ்வளவு தான்! ஆனால் அந்தக் கடுமையான ஒதுக்கமெல்லாம்  பாரதப் பெருநாட்டின் கோடிக்கணக்கான மக்களுடைய பொதுப்பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கவேயன்றி வேறில்லை!
பெரிய மெய்ஞ்ஞானிகளும் பரமாச்சாரியார்களும் கூட்டங்களிலிருந்து ஒதுங்கியே வாழ்கிறார்கள். மகாகவிஞர்களும் அப்படித்தான். ஆனால் அந்த ஞானிகளும் கவிஞர்களும் அல்லும் பகலும் அறுபது நாழிகையும் மக்களுக்காகவே வாழ்கிறார்கள்; தங்களுடைய குறுகிய சுகங்களுக்காக அல்ல! எனவே, மக்களோடு இடைவிடாத தொடர்பு கொண்டிருக்கிறார்கள்!
மனிதனைப் பற்றி இரண்டு மதிப்பீடு செய்யலாம். அவனுடைய தனிப்பட்ட குணாதியங்களைப் பற்றிய நிர்ணயம் ஒன்று, இரண்டாவது சமுதாயத்திற்கும் அவனுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள உறவுநிலை பற்றிய மதிப்பீடு. இரண்டாவதில்அவன் முழுகவனம் செலுத்த வேண்டும். தான், தன் அறிவு, தன் செல்வம், தன் உயர்வு என்ற எண்ணச்சிறையிலிருந்து விடுபட்டு, அவன் சமுதாயத்தோடு ஊடாடுகின்ற செயற்பாடுகளைப் பற்றியே அதிகம் சிந்தித்துக் கொண்டிருக்குமாறு செய்வது அவனுடைய பண்பாடு.
எந்த சமயத்திலும் சித்தம் துளங்காத, நடுக்கற்ற நிலைபேறு, உள்ளத்தின் மலர்ச்சி இவ்விரண்டுமே பண்பாளர்களின் அடையாளங்கள். பேராற்றலை வெளிப்படுத்திச் செயலாற்றுகின்ற பொழுதும், அகமும் முகமும் சலனமின்றித் திகழவேண்டும். உலகத்திலேயே மிகப் பிரமாண்டமான அருவி நையாகரா! அதன் பேரிரைச்சல் பத்து மைலுக்குக் கேட்கும். அத்துணை பெரியது நையாகராவின் கம்பீரியத்தோற்றம்; அதிசயம் வாய்ந்தது. ‘நையாகரா நீர்வீழ்ச்சி வேகமின்றிப் பாய்கிறது’ என்று ஒருவர் வருணித்தாராம். பிரமாண்டமான சக்தியோடு கூடிய அந்த பேரருவியின் தோற்றத்தில் அப்படியொரு துளங்காத, படபடப்பற்ற அமைதி, பேரமைதி!
அறிவின் ஆழநீள அகலங்களை ஆராயும்பொழுது, நம்மையறியாமலேயே ஓர் அடக்கம் நம்முள் உருவாகி விடுகிறது! கோடானு கோடானு கோடி மைல்கள் விரிந்த வையகத்தைச் சிந்தித்தால், நம்முடைய மனக்குமைச்சல்கள் அடங்கி அமர்ந்துவிடுகின்றன; மரணபயம் அகன்று விடுகிறது! இமயமலைச் சிகரங்களின் தூயபெருநிலைத் தோற்றம், நம்முடைய உள்ளத்தின் கொந்தளிப்பையெல்லாம் தனியச் செய்துவிடுகிறது. ஒரு பிரமாண்டமான கோபுரத்தின் முன்னால் நிற்கும்பொழுது, நம்முடைய நடையும் எண்ணமும் மென்மைபெறுகின்றன. அழகுமயமான சிற்பங்களும் ஓவியங்களும், நம் மனநிலையில் அழகிய மாற்றங்களை உண்டாக்கிவிடுகின்றன.!
உலகவாழ்க்கையைப் பற்றிய தத்துவச் சிந்தனைகளில் நன்றாகத் தோய்ந்தவர்களே, அன்றாட வாழக்கையில் எதிர்ப்படும் சின்னச்சின்ன நிகழ்ச்சிகளின் உட்பொருளை உள்ளபடி கண்டு நிதானத்தோடு வாழ முடியும். ஜனாதிபதி, பிரதம மந்திரி போன்ற அரசியல் உயர்நிலைத் தலைவர்களோடு பழகுகின்ற வாய்ப்புப் பெற்றவர்களுக்கே, தினசரிப் பத்திரிகைகளில் அடிபடும் விசயங்கள் பற்றிய உண்மைகளைப் புரிந்து கொள்ள முடியும்! மற்றவர்களுக்கோ, அவை, செய்தியாளர்கள் சரடு விடுவதாகவே தெரியும்!.
பண்பாட்டின் உயர்நிலைகள் பல தைரியசாலிகளுக்கே அனுபவமாகும்.
வாழ்க்கையில் பொய்மையும் வஞ்சகமும் நிறைந்திருக்கின்றன. அவற்றில் அடிபட்டுத் துன்பமும் துயரமும் அனுபவிக்காதவர்கள், வாழ்க்கையைப் பூரணமாக உணர்ந்ததாகச் சொல்லமுடியாது தானே!
கொடிது கொடிது வறுமை கொடிது என்று பேசப்படுகிறது. ‘‘வறுமையே, வெளியேறு’’ என்று அரசியல்வாதிகள் தொண்டைக்கிழியக் கத்துகிறார்கள். வறுமைக்கோடு பற்றிச் செய்திவராத நாளே கிடையாது. அத்தகைய வறுமையைக் கொஞ்சமாவது நிசமாக அனுபவித்தவர்களுக்கே அதைப் புரிந்து கொள்ள முடியம். வறுமையைப் பற்றி ஏட்டுச்சுரைக்காய் ஞானம் சபைக்கு உதவாது. ஒற்றைத் தலைவலியை அனுபவித்தவனுக்கே அதன் வேதனை புரியும். காதலில் விழுந்தவர்களுக்கே அந்த உணர்ச்சியின் அகலமும் நீளமும் புலப்படும். எனவே உலக வாழ்க்கையில் பழிச்சொல், அவமானம், வறுமை தனிமை ஆகியவற்றை சம்பாதித்து தந்தாலும் சத்தியத்தை விடாப்பிடியாகப் பற்றி நிற்க அஞ்சக்கூடாது!
இன்பதுன்பங்கள், நட்பு விரோதங்கள், மக்களின் விருப்பு வெறுப்புகள் எல்லாவற்றையும் நாம் அனுபவிக்க வேண்டும். அப்பொழுது தான், நன்கு பிணிதீர்ந்த முழு மனிதர்கள் ஆக முடியும்!.
உயர்ந்த பண்புநிலைகளை அடைய விரும்புகிறவர்கள் அதற்குப் பல தியாகங்கள் புரியாமல் முடியாது. பலாச்சுளையைச் சுவைக்கும் முன்னால் கரடுமுரடான மேல்தோலின் முட்களையும் பிசினையும் பொறுத்துக்கொள்ள வேண்டியது தான். செயற்கருஞ்செயல்கள் எளிதில் செய்து முடிக்கப் படுவதில்லை. மக்களின் உரத்த புகழ்ச்சிக் குரல்களை விரும்புகிறவன் உயர்ந்த சாதனைகளுக்கு ஆசைப்பட முடியாது. கல்லும் முள்ளும் அடர்ந்த பாதையும் இன்னல்களும் இடர்பாடுகளும் இடுக்கண்களுமே தெய்வீக மகான்களின் வாழ்க்கைப் பாதையில் குறுக்கிடுகின்றன! மிருதுவான சுகவாழ்க்கைக்கு ஆசைப்படுகிறவர்கள், வாழ்க்கையின் மகத்தான இலட்சியங்களை எண்ணிப் பார்க்கவும் முடியாது.


Go Back