பாழாய் போன மனசு - 20-Jun-2015 05:06:09 PM

புதுப்பெண் போல் உடை அணிந்து, 20 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் என்னிடம் ஆலோசனை பெற வந்தாள். வந்தவள் முகத்தில் திருமணமான மகிழ்ச்சிக்குப் பதிலாக, ஒரு விரக்தியும் கவலையும் இருப்பதை என்னால் காணமுடிந்தது. நான் “என்னம்மா தொந்தரவு?” என்று கேட்டேன். அவள், “டாக்டர் எனக்குக் திருமணம் ஆகி இருபது நாட்கள் ஆகின்றன. எனது சொந்த ஊர் நாகர்கோவில். என்னை பாளையங்கோட்டையில் ஒரு நல்ல படித்த வேலையிலுள்ள மாப்பிள்ளைக்கு கல்யாணம் செய்து கொடுத்தார்கள். மாமனாரும், மாமியாரும் என்னை அவர்கள் மகள் போல நல்ல முறையில் வைத்திருக்கிறார்கள். இருந்தாலும் எனது கல்யாணத்திற்கு பிறகு, எனது முகத்திலும், முதுகிலும் சின்ன சின்ன தடிப்புகள் ஏற்பட்டு, எனது தோற்றத்தையே கெடுத்து வருகிறது. எனது அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் பாளையங்கோட்டை ஒரு சூடான ஊர். அந்தச் சூட்டில்தான் இப்படி வருகிறது என்கிறார்கள். எனக்கு திருமணத்திற்கு பின் வந்தது, எனக்கும் என் கணவருக்கும் ஒவ்வாமை ஏற்பட்டு இப்படி வருகிறதோ என்ற எண்ணம் ஏற்பட்டு என் மனத்தை வாட்டுகிறது. “என்னால் நிம்மதியாக கணவருடன் பாளையில் வாழ முடியவில்லை” என்றாள்.

நான் அவளை சோதித்துப் பார்த்ததில், அவளுக்கு வந்திருப்பது பருவத்தில் வருகின்ற முகப்பரு என்பதை அறிந்தேன். அவளிடம், “அம்மா, உனக்கு வந்திருப்பது இந்த வயதில் ஏற்படுகின்ற முகப்பருதான். நீ நினைக்கிறது மாதிரி வேறொன்றும் பெரிய வியாதி இல்லை” என்றேன். அவள் “என்ன டாக்டர் நீங்கள் சொல்றீங்க? நான் என் வீட்டில் இருந்தவரையில் எனது உடம்பில் எந்தப் பருவும் கிடையாது. மேலும், முகப்பரு என்றால் முகத்தில் தானே வரவேண்டும். முதுகிலும், நெஞ்சிலும், ஏன் வர வேண்டும்?” என்று கேட்டாள்.

“அம்மா, முகப்பரு வருவது அவரவர் பாரம்பரிய குணம். சிலருக்கு பருவானது முகத்தோடு நிற்காமல் முதுகு, மார்பு, புஜங்கள் ஆகியவைகளிலும் ஏற்படும். அது எந்த வயதில் ஆரம்பிக்க வேண்டும், எங்கு, எவ்வளவு வரவேண்டும் என்பதையெல்லாம் முடிவு செய்வது நமது மரபு அணுக்களே. தாய் தந்தையிடம் இருந்து நம்மை உருவாக்கும் மரபு அணுக்களே இதனைத் தீர்மானிக்கின்றன. 

அவளோ விடாப்பிடியாக “டாக்டர், எனக்கு திருமணத்திற்கு முன்னால் எந்தப் பருவும் கிடையாது” என்றாள். “அம்மா, திருமணம் ஆன உடன் பருக்கள் அதிகமாவதற்கு முக்கிய காரணம் நாம் உபயோகப்படுத்தும் அழகு சாதனங்களே மேலும் நமக்கு பரு வரவேண்டிய வயதும் அதுவாக இருக்காலாம். இன்னும் சில பெண்கள் மாதவிலக்கை தள்ளிப்போடுவதற்காக திருமணத்தின் போது சில ஹார்மோன் மாத்திரைகள் சாப்பிடுவார்கள். அதனால் பரு அதிகப்படலாம். எதுவாக இருந்தாலும் பாளையங்கோட்டை வந்ததால்தான் பரு வந்தது; மேலும் கணவரோடு ஒவ்வாமையில் வந்தது” என்ற எண்ணத்தை தயவு செய்து விட்டுவிடு. இக்காலத்தில் எத்தனையோ மாமியார்கள், தன் மருமகளுக்கு பரு இருந்தால் ஏதோ வியாதி என்று எண்ணி, தந்தை வீட்டுக்கு அனுப்பி சரி செய்து வரும்படி அனுப்புவதைப் பார்த்திருக்கிறேன். கணவன்மார்களும் தாய் சொல்லைத் தட்டாமல் இந்த விடயத்தில் சும்மா இருப்பதைப் பார்த்திருக்கிறேன். உன்னைப் பொறுத்தவரையில், உன்மாமியாரும் கணவரும் இதை பொருட்படுத்த வில்லை. நீயாக வேண்டாத கற்பனை பண்ணி வாழ்வை வீண் அடிக்காதே” என்றேன்.

இதைக் கேட்ட அவள், “இந்தப் பருவை போக்க வழிதான் என்ன?” என்று கேட்டாள். “அம்மா, பருவை தீர ஒழிப்பதற்கு இன்றும் மருந்து கண்டுபிடிக்கவில்லை. அது வயதில் ஏற்படுகின்ற மாற்றமே, இதை ஒழித்துவிடலாம் என்று வியாபார நோக்கத்தோடு பல மருந்துகள் சந்தையில் விற்கப்படுகின்றன. அவை யாவும் நன்மை பயப்பதில்லை. மாறாக, ஒவ்வாமை போன்ற தீமை ஏற்படுத்த வழி செய்யும். அப்பேற்பட்ட மருந்துகளைத் தவிர்ப்பதும் பருக்களைக் கிள்ளாமல் இருப்பதும் மிக முக்கியமான வைத்தியமாகும்”. இப்போது அவள் கணவர் குறுக்கிட்டு “நல்லா சொல்லுங்க சார், யார் என்ன சொன்னாலும் அதை உபயோகிப்பாள்” என்றார். நானும், அவள் பருவை போக்க முடியா விட்டாலும், சிறிய மருந்துகளால் குறைக்க முடியும் என்று கூறி வேண்டியதை எழுதி கொடுத்து, மகிழ்ச்சியாக வாழ வாழ்த்தி அனுப்பினேன்.

இதே போல ரங்கா மாமி, கரப்பான் நோய்க்கு என்னிடம் வைத்தியம் செய்பவர். மாமிக்கு தன் அண்ணன் மீது அலாதிப் பாசம். அன்று திடீரென என் வீட்டிற்கு வந்து “டாக்டர் சார் உங்கள் கிளினிக்குக்கு வந்தால் பேச முடியவில்லை. இங்கேயாவது என் வியாதிக்கு நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள் என்று கேட்டுப் போகலாம் என வந்தேன்” என்றார்.

நானும் உங்களிடம் பல வருசமா வருகிறேன். என் நோய் தீர்ந்த பாடில்லே. பக்கத்தில் உள்ளவர்கள் இது கரப்பான் நீங்கள். வைத்தியரிடம் சென்று வைத்தியம் செய்தால் சரியாகிவிடும் என்று கூறி வைத்தியர்களிடம் செல்லக் கட்டாயப் படுத்துகிறார்கள். நானும் நீர் தான் தஞ்சம் என வந்து கொண்டிருக்கிறேன். என் வியாதி தீருமா?” அல்லது என்னோடுதான் தீருமா” எனக்கூறி கண் கலங்கினார். 

நான் மாமியை சற்று தைரியப்படுத்திவிட்டு மாமி நீங்கள் உபயோகப்படுத்தும் சலவை சோப், பொடிகள், பாத்திரம் துலக்கும் பொடிகள் உங்களுக்குப் பிடிக்காமல்தான் இந்த கரப்பான் வருகிறது என்றேன். ஏன் டாக்டர் ஊரில் உலகத்தில் எத்தனையோ மக்கள் சலவைசோப் உபயோகிக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் வராமல் எனக்கு ஏன் வருகிறது? மாமி உங்கள் உடம்பில் அந்தப் பொருட்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டு விட்டது. அந்த ஒவ்வாமையே இவ்வாறு வியாதியை ஏற்படுத்துகிறது. ஒவ்வாமை என்பது உடல்வாகுப்படி ஒரு சிலருக்கு ஏற்படும். அதே பொருளை நாம் பல ஆண்டுகளாக பயன்படுத்திக் கொண்டிருந்தாலும் திடீரென்று ஒருநாள் ஒவ்வாமை ஏற்படலாம். வந்த தொந்தரவைச் சரிசெய்ய மாத்திரைகள், களிம்புகள் உள்ளன. ஆனால் அது வராமல் இருக்க வேண்டுமானால் அந்தப் பொருட்கள் நம் மீது படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 

‘இரண்டு பத்துப்பாத்திரம் தேய்த்தாலும் இப்படி வந்து விடுகிறது. கையெல்லாம் ஊரல், கொப்புளம், வீக்கம் நீங்கள் இதற்கு ஒரு நிரந்தரத் தீர்வு சொல்லுங்கள். நீங்கள் கூறுவதில்தான் நான் வாழ வேண்டுமா அல்லது ஈசனிடம் சேர வேண்டுமா என்ற முடிவு எடுக்கவேண்டும்’ எனக்கூறி ஓவென அழ ஆரம்பித்து விட்டார். 

மாமி நீங்கள் பாத்திரம் துலக்கும் போதும், துணி துவைக்கும் போதும் கையுரை அணிந்து வேலை செய்தால் இந்நோயிலிருந்து தப்பிவிடலாம், மாமியோ, பக்கத்து ஆத்து வேலைக்காரி கையுரை போட்டுத்தான் தேய்க்கிறாள். அவளுக்கு அப்படியும் இப்படியிருக்கிறதே டாக்டர் என்றாள். மாமி, கையுரை அணிந்திருக்கும் பொழுது அதற்குள் தண்ணீர் புகுந்துவிடாமல் பார்ப்பது மிகவும் அவசியம் ஆகும், மாமியும் சரி, டாக்டர் நான் அவ்வாறு செய்து பார்க்கிறேன் என்று கூறி விட்டுச் சென்றார். ஆறு மாதங்கள் கழித்து வந்து, டாக்டர் எனக்கு எந்த அலர்ஜியும் இப்போது இல்ல, என்று மகிழ்ச்சியாகக் கூறினார்.

ஆக ஒவ்வாமை என்பது எந்த பொருளுக்கும் வரலாம். தோலில் வரும் ஒவ்வாமை அதன் மேல்படும் பொருள்களினாலேயே வரும். இதில் மஞ்சள் - சந்தனம் - எண்ணெய் போன்றவைகளில் சேர்க்கும் வாசனை பொருட்கள் அல்லது வாசனைத் திரவியங்கள், செடி கொடிகள், தாவரப் பொருட்கள், சிமெண்ட் உலோகங்கள் ஆகியவையே முக்கியமானவை. எனவே ஒவ்வாமை வேறு; முகப்பரு வேறு.

இளைஞர்கள், பருவ வயதில் ஏற்படுகின்ற முகப்பரு போன்ற மாற்றங்களை எண்ணி மனம் குழம்பி, படிப்பு, தொழில், திருமணம் போன்ற முக்கியமான பொறுப்புகளில் கவனம் சிதறாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். மேலும், நம் அறியாமையையும், உளகிடக்கைகளை பணமாக்க எண்ணும் வியாபாரிகளின் வலையில் சிக்காமல் இருந்தால், இளைஞர்களின் பணமும் காலமும் வெகுவாக மிச்சப்படும்.

தற்காலப் பெண்களும், ஆண்களும் அழகு மோகத்தால் எத்தனையோ அழகு சாதனப் பொருட்களை உபயோகிக்கிறார்கள். அந்த அழகுச் சாதனங்கள் இருபத்தைந்து வயது தோற்றத்தை இருபது வயதாகக் காட்டும். ஆனால் அதே பெண்ணை நாற்பத்தைந்தில் அறுபதாகக் காட்டும். இது அவசியம்தானா என அவர்கள் சிந்திக்க வேண்டும்.

- டாக்டர்.மகாகிருட்டிணன்Go Back